பஞ்ச மகா புருஷ யோகம்
உங்கள் ஜாதகத்தில் ருசக, பத்திர, ஹம்ச, மாளவ்ய அல்லது சச யோகம் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கணிக்கலாம்.
பஞ்ச மகா புருஷ யோகம் என்றால் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் சூரியன், சந்திரன் தவிர்த்து மற்ற 5 கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், மற்றும் சனி ஆகிய கிரகங்களால் உருவாகும் 5 மிகப்பரிய ராஜயோகங்களே "பஞ்ச மகா புருஷ யோகங்கள்" எனப்படுகின்றன.
'பஞ்ச' என்றால் ஐந்து. 'மகா புருஷ' என்றால் மாபெரும் மனிதர் அல்லது சாதனையாளர் என்று பொருள். இந்த 5 யோகங்களில் ஏதேனும் ஒன்று ஜாதகத்தில் முழுமையாக அமைந்திருந்தாலும், அந்த ஜாதகர் தன் வாழ்வில் ஏதேனும் ஒரு துறையில் அசைக்க முடியாத மாபெரும் உச்சத்தைத் தொடுவார்.
ராஜயோகம் எப்போது வேலை செய்யாது? (Yoga Bhanga)
மேலே உள்ள கணிப்பானில் உங்களுக்கு யோகம் இருப்பதாக வந்தாலும், சில நுட்பமான விதிகளின்படி அந்த யோகம் செயலற்றுப் போக வாய்ப்புள்ளது. அவை:
- அஸ்தங்க தோஷம் (Combustion): யோகத்தைத் தரும் அந்த கிரகம் சூரியனோடு மிக நெருக்கமாக இணைந்து அஸ்தங்கம் அடைந்திருக்கக் கூடாது.
- நவாம்சத்தில் நீசம் (Debilitated in D9): ராசிக் கட்டத்தில் (D1) ஆட்சி/உச்சம் பெற்ற கிரகம், நவாம்சக் கட்டத்தில் (D9) நீசம் பெற்றிருந்தால் யோகம் முழுமையாக வேலை செய்யாது.
- வக்ர நிலை (Retrogression): உத்தம காலாம்ருத விதியின்படி, ஒரு கிரகம் உச்சம் பெற்று, அதே சமயம் வக்ரம் அடைந்திருந்தால், அது நீச கிரகத்திற்குச் சமமான பலனையே தரும்.
- ராகு/கேது சேர்க்கை: யோகம் தரும் கிரகம், ராகு அல்லது கேதுவுடன் மிக நெருக்கமாக (அதே பாகையில்) இணைந்திருக்கக் கூடாது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
இந்த யோகம் எப்படி உருவாகிறது (விதி என்ன)?
இந்த 5 கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம், லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு கேந்திரமான 1, 4, 7, 10-ஆம் இடங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து, அந்த இடம் அந்த கிரகத்திற்கு 'ஆட்சி' அல்லது 'உச்ச' வீடாக இருந்தால் இந்த யோகம் வேலை செய்யும்.
சந்திர கேந்திரம் என்றால் என்ன?
லக்னத்தை வைத்து மட்டுமே கேந்திரங்களை (1, 4, 7, 10) கணக்கிடாமல், உங்கள் ஜென்ம ராசியான சந்திரனிலிருந்து 1, 4, 7, 10-ஆம் வீடுகளில் ஆட்சி/உச்சம் பெற்றிருந்தாலும் இந்த பஞ்ச மகா புருஷ யோகம் வேலை செய்யும்.
5 யோகங்களின் பெயர்கள் என்னென்ன?
செவ்வாயால் 'ருசக யோகம்', புதனால் 'பத்திர யோகம்', குருவால் 'ஹம்ச யோகம்', சுக்கிரனால் 'மாளவ்ய யோகம்', மற்றும் சனியால் 'சச யோகம்' உருவாகிறது.
எனக்கு எந்த யோகமும் இல்லை, இது கெடுதலா?
இல்லை! பஞ்ச மகா புருஷ யோகம் என்பது பல லட்சங்களில் ஒருவருக்கு மட்டுமே முழுமையாக அமையும் விசேஷ அமைப்பாகும். இது தவிர தர்ம கர்மாதிபதி யோகம், கஜகேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் என பல நூறு சுப யோகங்கள் உள்ளன. எனவே கவலைப்படத் தேவையில்லை.